முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்
வீரர்கள் 16ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள் வருகிற 16ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் தொகுதி மேம்பாட்டு நிதி உள்பட ரூ.3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலைஞர் கலையரங்கம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அவர் தனது உரையில், மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன், தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியை முழுவதுமாக கல்வி, விளையாட்டு மேம்பாடு மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக பயன்படுத்தி வருகிறார் என்று பாராட்டினார்.
2016ல் துவங்கப்பட்ட இந்த கல்லூரியில் தற்போது 1,300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள் என்றும், தமிழக அரசு கல்வியில் முன்னணியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் சுமார் 75% உள்ளனர். இந்த சதவீதத்தைக் 100% ஆக உயர்த்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றார்.
நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், எம்பி பி.வில்சன், எம்எல்ஏக்கள் எஸ். அரவிந்த் ரமேஷ், ஏ. எம். வி. பிரபாகர ராஜா, உயர்கல்வித் துறை செயலாளர் சங்கர், கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, மாவட்ட கலெக்டர் சினேகா, கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Leave a Comment