தலைமை ஆசிரியர்களுக்கு விருது
சிறந்த 100 அரசுப் பள்ளிகளுக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை
Akwa Academy
சென்னை, ஜூலை 2: தமிழகத்தில் 2023-2024-ஆம் கல்வியாண்டில் தேர்வு செய்யப்பட்ட 100 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அண்ணா தலைமைத்துவ விருதும், அந்தப் பள்ளிகளுக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்கத் தொகையும் ஜூலை 6, ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படவுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியதாவது:
தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படும் என 2022-2023 சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி பள்ளிக் கட்டமைப்பு, கல்விச் செயல்பாடுகள், இணைச் செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொண்ட மதிப்பீட்டின் மூலம் சிறந்த தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2023-2024 கல்வியாண்டிற்காக 100 பள்ளிகள் விருதிற்குத் தேர்வாகியுள்ளன. இந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு ஜூலை 6-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.
இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று விருதுகளை வழங்க உள்ளார்.
விருதுடன், பள்ளிகளுக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை, கேடயம் ஆகியவையும் வழங்கப்படும்.
மேலும், தேர்வு செய்யப்பட்ட தலைமையாசிரியர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை எதுவும் நிலுவையில் இல்லை என்பதை உறுதிசெய்து அனுப்பவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊக்கத் தொகையை பள்ளியின் வளர்ச்சிப் பணிகளுக்காக பயன்படுத்த தலைமை ஆசிரியர்கள் அதிகாரம் பெற்றுள்ளனர்.
அன்பழகன் விருது: இதேபோல், பேராசிரியர் அன்பழகன் விருதுக்கு தேர்வான 76 அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் ஜூலை 6, திருச்சி விழாவில் சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Comment