மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறவில்லையென்றால் வாழ்க்கை பாழாகிவிடாது.
பரிக்ஷா பே சர்ச்சா – மாணவர்களுக்கான நிகழ்ச்சி
தேர்வு தொடர்பாக மாணவர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை போக்கும் நோக்கில், பரிக்ஷா பே சர்ச்சா (தேர்வுகள் மீது விவாதம்) என்ற தலைப்பில் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
இந்த ஆண்டு 8வது முறையாக நிகழ்ச்சி நடந்தது. மாநில, யூனியன் பிரதேச அரசுப் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயாக்கள், சைனிக் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 35 மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.
பரிக்ஷா பே சர்ச்சாவில் பதிவு செய்தவர்கள்
ஒன்றிய அரசு இணையதள தகவலின்படி,
- 3.30 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள்
- 20.71 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்
- 5.51 லட்சத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள்
மாணவர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவுரை
பிரதமர் மோடி கூறியது: "ஞானம் மற்றும் தேர்வுகள் இரண்டு வெவ்வேறு விஷயங்கள். தேர்வுகள் எல்லாம் இறுதி என்று பார்க்கக்கூடாது. மாணவர்கள் கட்டுப்படுத்தப்படக் கூடாது, அவர்களின் ஆர்வங்களை ஆராய அனுமதிக்கப்பட வேண்டும்."
மாணவர்கள் தங்கள் நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்தி திறம்பட மேலாண்மை செய்ய வேண்டும். "உங்கள் நேரத்தைக் கட்டுப்படுத்துங்கள், வாழ்க்கையைக் கட்டுப்படுத்துங்கள், நிகழ்காலத்தில் வாழுங்கள்" எனவும் அறிவுரை வழங்கினார்.
தேர்வுகள் குறித்து பிரதமர் மோடி கூறியது:
10 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒருவர் நல்ல மதிப்பெண் பெறவில்லை என்றால், அவர்களின் வாழ்க்கை பாழாகிவிடும் என்ற நம்பிக்கை தவறானது.
மாணவர்கள் அழுத்தத்தில் இருப்பினும் கவலைப்படாமல் தேர்வுக்கு தயாராக வேண்டும். "பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளை புறக்கணித்து, மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவது போல, மாணவர்களும் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.