மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் உறுதி
2026 தேர்தலில் அரசு ஊழியர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள்
புதுக்கோட்டை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலின்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், திமுக அரசு மீது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் இந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், வரும் தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள்.
குறிப்பிட்ட பிரச்சினையில் எதிர்ப்பு தெரிவிப்பதாலேயே கூட்டணி முறிந்துவிடும் என்ற முடிவுக்கு வரத் தேவையில்லை. வேங்கைவயல் விவகாரத்தில் விசிக மட்டுமின்றி, நாங்களும் அதிருப்தியில் இருக்கிறோம். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தைப் பொருத்தவரை, ஹெச். ராஜா உள்ளிட்ட இந்து அமைப்பினர் பேசியவை கண்டனத்துக்குரியவை. மத நல்லிணக்கத்தைக் காப்பாற்றும் வகையில், அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் வழிபாட்டு உணர்வை, அரசியல் லாபத்துக்காக பாஜக பயன்படுத்தி வருகிறது.