Follow us on

Akwa Academy

Akwa Academy
Welcome

Wednesday, February 12, 2025

பள்ளிக் கல்விக்கான ரூ.2,401 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளிக் கல்விக்கான ரூ.2,401 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை அமைச்சர் அன்பில் மகேஸ்
பள்ளிக் கல்விக்கான ரூ.2,401 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை அமைச்சர் அன்பில் மகேஸ்

பள்ளிக் கல்விக்கான ரூ.2,401 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை

அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை, பிப். 11: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,401 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் (எஸ்எஸ்ஏ) 2018-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்துக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் என்ற பகிர்வு முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன்படி, 2024-2025-ஆம் நிதியாண்டில் மத்திய அரசு தனது பங்கான ரூ.2,152 கோடியை தமிழகத்துக்கு வழங்கவில்லை.

இதற்கு முந்தைய 2023-2024-ஆம் கல்வியாண்டில் தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.3,533 கோடியில் இரு தவணைகள் மட்டுமே விடுவிக்கப்பட்டன. அதன்பின் பிஎம்ஸ்ரீ பள்ளிகளை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டால் மட்டுமே ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் நிதியை விடுவிக்க முடியும் என மத்திய அரசு வலியுறுத்தியது.

இது குறித்து ஆராய பள்ளிக் கல்வித் துறை செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு தனது அறிக்கையில் பிஎம்ஸ்ரீ பள்ளித் திட்டத்தின் முதல் நிபந்தனையாக மும்மொழிக் கொள்கை பின்பற்ற வேண்டும். இது தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் கல்வி முறைக்கு முரணாக உள்ளதாக தெரிவித்தது.

நிதிவழங்கவில்லை: இதையடுத்து பிஎம்ஸ்ரீ பள்ளி ஒப்பந்தத்தை கணக்கில் கொள்ளாமல், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் திட்ட நிதியை விடுவிக்குமாறு மத்திய கல்வி அமைச்சகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

எனினும், நிகழ் நிதியாண்டில் மத்திய அரசு தனது பங்கான ரூ.2,152 கோடியை இன்னும் வழங்கவில்லை. அதனுடன் தமிழகம், கேரளம் மற்றும் மேற்குவங்கம் ஆகியவை தவிர பிற மாநிலங்களுக்கு ரூ.17,632 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

எனவே, தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2023-2024-ஆம் ஆண்டின் 4-ஆம் தவணை நிதி ரூ.249 கோடி, 2024-2025-ஆம் ஆண்டின் நிதி ரூ.2,152 கோடி என ரூ.2,401 கோடியை மத்திய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.