திறன் மேம்பாட்டு பயிற்சி: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கு தேர்வாகியுள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரக சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம்கள் 5.10.2023 முதல் 29.3.2025 வரை 67 தொகுதிகளாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
அந்த வரிசையில், அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி ஜூலை 3 முதல் செப்டம்பர் 13 வரை மதுரையில் 12 தொகுதிகளாக நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வேண்டிய தலைமை ஆசிரியர்களின் விவரங்கள் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலில் உள்ளவர்களை பணியில் இருந்து விடுவித்து பயிற்சியில் தவறாமல் பங்கேற்க அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு தங்கள் மாவட்டக் கல்வி அலுவலகங்களை தலைமை ஆசிரியர்கள் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.