தேசிய நல்லாசிரியர் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது.
நிகழாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தகுதியான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆசிரியர்கள் nationalawardstoteachers.education.gov.in என்ற இணையதளம் மூலம் ஜூலை 13க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணிகளில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியில்லையென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பித்த ஆசிரியர்களில் தகுதியானவர்களை, முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான மாவட்டத் தேர்வுக் குழு தேர்வு செய்து ஜூலை 16க்குள் மாநிலத் தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டும்.
தேர்வுக்கான வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் வழங்கியுள்ளதை பின்பற்றி செயல்பட வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.